சென்னை மாநகராட்சியின் 2023- 24 ம் ஆண்டுக்கான மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்து வருகிறார். சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில், சென்னை மாநகராட்சியின் வசம் கொண்டு வரப்பட்ட புறநகர் பள்ளிகளில் கட்டமைப்பை தரம் உயர்த்துதல், ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி திட்டங்களும், சிங்கார சென்னை 2.O திட்டத்திற்கான பணிகள், புதிய சாலை வசதிகள், புதிய பொது கழிவறைகள் அமைப்பது போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, சென்னையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறு தீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் பிரியா அறிவித்தார். மேலும், பரமாரிப்பு பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளது. சென்னையில் 10 மேல்நிலைப்பள்ளிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகம் மேம்படுத்தப்படும் என்றும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் மகிழ்ச்சியான வகுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.