வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு 60 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி, மாநிலக்கட்சியான திப்ரா மோதா ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது. 20 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பா.ஜ.க. அதிகபட்சமாக 55 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 47 இடங்களிலும், மாநிலக்கட்சியான திப்ரா மோதா கட்சி 42 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. 28.13 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர்.
ஆட்சியைத்தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் கடும் போட்டியில் இறங்கின. விறுவிறுப்பான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. மிகுந்த ஆர்வத்துடன் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கி படையெடுத்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்குப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக்கடமையை ஆற்றினர்.
ரெய்மா தொகுதியில், வாக்காளர்கள் டும்புர் ஏரியில் படகுகளில் வந்து வாக்குப்பதிவு செய்தனர். பிரதாப்கார் தொகுதியில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர். வாக்குப்பதிவின்போது ஒரு சில வன்முறைச்சம்பவங்களும் அரங்கேறின. செபாஹிஜலா மாவட்டத்தின் பாக்சாநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச்செயலாளர் தாக்கப்பட்டார்.
போர்டோவாலி தொகுதியில் போட்டியிடும் முதல்-மந்திரி மாணிக் சகா, அகர்தலாவில் காலையிலேயே வாக்குப்பதிவு செய்தார். அங்கு அவர் நிருபர்கள் மத்தியில் பேசும்போது, “பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறும் என்று 100 சதவீதம் நம்புகிறேன். கடந்த முறையை விட அதிக இடங்களைப் பெறுவோம்” என தெரிவித்தார். பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் தேப், கோமதி மாவட்டத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார், அகர்தலாவில் வாக்குப்பதிவு செய்தார். 25 ஆண்டுகளில் முதல்முறையாக இவர் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ராம் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு செய்தார். மக்கள் தைரியமாக வந்து வாக்கு அளித்து, ஜனநாயகம், அமைதி, சமாதானமான சூழலை உருவாக்கும் புதிய அரசை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெருந்திரளாக வந்து வாக்கு அளித்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது. 85 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் வட்டார தகவல்கள் கூறுகின்றன. வாக்குப்பதிவு அமோகமாக இருந்ததால், அது எதிர்க்கட்சிக்கு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆதரவாக அமைந்து, அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. கடந்த தேர்தலில் அங்கு 89 சதவீத வாக்குகள் பதிவானது, அப்போதும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந் தேதி நடக்கிறது. அதே நாளில்தான் மேகாலயா, நாகலாந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.