தஞ்சாவூர் அருகே பள்ளியேரி கிராமத்தில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. சாலைகள் சீரமைத்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே, சாலையை சீரமைக்க கோரி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நுாற்றுக்கும் அதிகமானோர் தஞ்சாவூர் – பூதலுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என கோஷமிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போலீசார் பேசிய நிலையில், பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே சாலை சீரமைக்க உறுதி கொடுத்துள்ளனர் என்று மறியல் நடத்தியவர்களிடம் போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரைமணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் கடந்த பல ஆண்டாக சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெருக்களிலும், சாலைகளிலும் சாக்கடை நாற்றம் வீசுகிறது. எங்கள் கிராமத்தில் சுமார் 50 இளைஞர்கள் உள்ளனர். கிராமத்தின் நிலையை பார்த்து விட்டு பெண் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு திருமணம் ஆவது கடினம் என்ற நிலை உள்ளது. எங்கள் கிராமத்திற்கு அதிகாரிகள் வந்து பார்த்து விட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.