நீர் நிலைகளை தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.
கடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இறுதி நாளில் 17 சட்ட மசோதாக்கள் விவாதம் பற்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் மூலம் அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களுக்கு 100 ஹெக்டர் வரை உள்ள நிலங்களில் உள்ள நீர்நிலைகள் நீர் வழிப்பாதைகள் உட்பட தனியாரிடம் கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகள் பாதுகாத்திடவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளை தனியாருக்கும் தாரை வார்க்கத்தான் இந்த சட்டம் பயன்படும்.
எனவே தமிழக அரசு இந்த சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் , ஒன்றிய அரசு பொது விநியோக கடைகளிலும் ஊட்டச்சத்து மையங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து தமிழ்நாட்டில் பரவலாக நடைமுறைப்படுத்தி உள்ளனர். எவ்விதமான முழுமையான ஆய்வுகளும் இல்லாமல் ஒன்றிய அரசும் தமிழக அரசும் செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க கூடாது.
மேலும் புதுச்சாவடியில் மீத்தேன் திட்டத்தை அமல்படுத்திட குழாய்கள் இறக்கப்பட்டு விவசாயிகள் நிலத்தில் பதிப்பதை கைவிட வேண்டும். பொன்னேரியை ஆழப்படுத்தி நான்கு வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டியனேரி, ஆவேரியை ஆழப்படுத்தி பாசன வசதி விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.