தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீது அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்று இரவு 8.40 மணிவிமானத்தில் கவிதாவை டெல்லிக்கு அழைத்து சென்ற அமலாக்கத் துறையினர், அங்கு உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே. நாக்பால் முன்னிலையில் அவரை இன்று காலை ஆஜர்படுத்தினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, இது ஒரு சட்டவிரோத கைது என குற்றம் சாட்டினார்.
கவிதாவை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைது உத்தரவில், “சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தை கவிதா இழைத்திருக்கிறார். எனவே, மார்ச் 15, மாலை 5.20 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார். எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பதற்கான 14 பக்க விளக்க அறிக்கை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமலக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாரத் ராஷ்ட்ர சமிதியின் மூத்த தலைவரான 45 வயதாகும் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி ஏறக்குறைய 2 மாதங்கள் கழித்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அதே நேரத்தில் மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. புதிய மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது, சட்டவிரோதப் பரிவர்த்தனை என நடைபெற்றது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை சம்மனுக்கு இதுவரை ஒருமுறை கூட கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. 8 முறை அனுப்பியுள்ள நிலையில், கெஜ்ரிவால் தொடர்ந்து சம்மனை ஏற்று ஆஜராக மறுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, டெல்லி ரோஸ் அவினியூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று காலை நேரில் ஆஜரானார். கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததையடுத்து நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு இருந்தது. காலை 10 மணியளவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 15 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் 1 லட்சத்திற்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்ட்டது.. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சியினர் அச்சம் தெரிவித்த நிலையில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது ஆம் ஆத்மி கட்சியினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.