புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக இருந்தது என்று காங்கிரஸ் கட்சி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் கூறியிருப்பதாவது: “அமெரிக்காவில் இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட போது கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது ஒரு இந்தியனாக மிகவும் வேதனையாக இருந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு இந்திய தூதர் தேவ்யானி கோப்ராகடே அமெரிக்காவில் கைவிலங்கிடப்பட்டு, ஆடைகளை களைந்து சோதனை செய்யப்பட்டதை நான் நினைத்து பார்க்கிறேன். அப்போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங், அமெரிக்க தூதர் நான்சி போவெல்லிடம் தனது கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.
அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் அதற்கு கடுமையான எதிர்வினையாற்றியிருந்தது. அந்தநேரத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த காங்கிரஸ் குழுவைச் சந்திக்க,அப்போதைய மக்களவை சபாநாயகர் மீரா குமார், காங்கிரஸ் தலைவர்கள் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் ராகுல் காந்தி போன்றோர் மறுத்து விட்டனர். அமெரிக்காவின் நடவடிக்கை வருந்தமளிக்கிறது என்று டாக்டர் மன்மோகன் சிங் கூறியிருந்தார்.
அமெரிக்க தூதரகத்துக்கு வழங்கப்பட்ட பல சலுகைகளை இந்தியா திரும்பப் பெற்றது. அதில், தூதரக ஊழியர்கள் சலுகை விலையில் உணவுப் பொருட்கள், மதுபானங்கள் இறக்குமதிக்கு தடை உள்ளிட்டவையும் அடங்கும்.
தேவ்யானி கோப்ராகடே நடத்தப்பட்ட விதம் குறித்து ஜான் கெர்ரி தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார். அமெரிக்க நிர்வாகம் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங்-ஐ அழைத்து அந்நாட்டின் வருத்தத்தைத் தெரிவித்திருந்தது.” இவ்வாறு கெரா பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப் அதிரடி: கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 18,000 பேர் உள்ளனர்.
நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்: இந்த சூழலில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானத்தில் வந்த 205 பேரும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பஞ்சாப் காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய வெளியுறவுத் துறை, மத்திய உள்துறை அதிகாரிகளுடன் அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 205 பேரில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்தவர்கள் ஆவர். இதன்காரணமாகவே அமிர்தசரஸில் விமானம் தரையிறங்கியது. விமானத்தில் வந்த அனைவரும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.
டெல்லியில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி கூறும்போது, “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 205 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இது அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற யாரும் முயற்சி செய்ய வேண்டாம்” என்று தெரிவித்தார்.