குற்ற வழக்கு தொடர்பு துறை இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். குற்ற வழக்கு தொடர்வுத்துறையின் இயக்குனர் சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றதால் அந்த இடம் காலியாக இருந்தது. தற்காலிக பொறுப்பு இயக்குனராக மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார். அவர், தனது நீதிமன்ற பணி பாதிக்கப்படுவதால் நிரந்தர இயக்குனரை நியமித்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கடிதங்களின் வாயிலாக அரசிடம் கோரினார். இதையடுத்து, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தேர்வுகுழு, புதிய இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜாவை தேர்வு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் வழக்கிறிஞர் கிருஷ்ணராஜா இயக்குனராக பொறுப்பேற்றார்.
இவர் மதுரையை சேர்ந்தவர். உயர்நிலை, மேல்நிலை கல்வியை மதுரை ஐக்கிய கிறிஸ்தவ மேல்நிலை பள்ளி மற்றும் தியாகராசர் மேல்நிலைப் பள்ளியிலும் முடித்து, மதுரைக் கல்லூரியில் பி.ஏ சமூகவியலில் பட்டம் பெற்றார். பின்னர் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1990ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். இவர் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் நிலை வழக்கறிஞராகவும், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், சென்னை மாநகர கூடுதல் பப்ளிக் பிராசிக்கியூட்டராகவும் பணிபுரிந்தவர்.