உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் காவிரியில் , கர்நாடகம் விட வேண்டும். இதனை 12 மாதங்களுக்கும் எவ்வளவு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி உள்ளது. அதன்படி ஜூனில் 9.19 டிஎம்சி, ஜூலையில் 31.24 டிஎம்சி, ஆகஸ்டில் 49.95 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஆனால் இன்றைய நிலவரப்படி 10 முதல் 12 டிஎம்சி அளவுக்கு தான் கர்நாடகம் தண்ணீர் தந்து உள்ளது.
ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் 40.43 டிஎம்சி தண்ணீர் தந்து இருக்க வேண்டும். ஆனால் 2 மாதத்தில் சுமார் 30 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தரவில்லை. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர வேண்டும் என தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் 2 முறை டில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டார். ஆனாலும் உரிய தண்ணீர் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பிரச்னை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கடிதம் எழுதியதுடன் ஆணையத்தின் கூட்டத்தை கூட்டும்படியும் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து ஆணையத்தின் 22வது கூட்டம் வரும் 11ம் தேதி டில்லியில் கூடுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுவை மாநில அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கான தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு வலியுறுத்தும் என தெரிகிறது. மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 62.49 அடி. அணைக்கு வெறும் 305 கனஅடி தண்ணீர் தான் வருகிறது.