இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் (LMV) போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு வழங்கும் உரிமைகோரலில் சட்டசிக்கல்கள் இருந்து வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ராய், பிஎஸ் நரசிம்ஹா, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடந்த விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான ஆர்.வெங்கடரமணி, ” மோட்டார் வாகனங்கள் சட்டம், 1988ஐ திருத்துவதற்கான ஆலோசனைகள்கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும்” என்றும் தெரிவித்திருந்தார். சட்டத் திருத்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வணிக வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடைகொண்ட போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவால் இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.