இந்திய கிரிக்கெட் அணி மேற்கு வெஸ்ட் இண்டீஸ் சென்று உள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்ற நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் டேகனரின் சந்தர்பால் 12 ரன்களும் , கேப்டன் கிரேக் பிராத்வைட் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ரேமன் ரைபர் 2 ரன்கள் , ஜெர்மைன் பிளாக்வுட் 14 ரன்கள் , ஜோசுவா டா சில்வா 2 ரன்கள் , ஜேசன் ஹோல்டர்18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அனியில் சிறப்பாக விளையாடிய அலிக் அதானாஸ் 47 ரன்கள் எடுத்தார்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.
இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 3 விக்கெட் , ஷார்துல் தாகூர் , சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா , அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.தொடர்ந்து நிலைத்து ஆடி பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டனர்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்கள் , ரோகித் சர்மா 30 ரன்கள் எடுத்துள்ளனர்.
நேற்று 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், அஸ்வின் இதுவரை டெஸ்ட், ஒன்டே, டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து 700 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்திய வீரர்கள் கும்ப்ளே 900 விக்கெட்டுகளுக்கு மேலும், ஹர்பஜன் சிங் 711 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளனர். மேற்கண்ட இருவரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். அஸ்வின் டெஸ்ட்களில் மட்டும் விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் அஸ்வின் ஹர்பஜன் சாதனையை முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.