சத்துமாவு உள்ளிட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இவர் சினிமா தயாரிப்பாளர் ஆவார். இவர் திமுகவில் பொறுப்பில் இருந்தார். போதை பொருள் கடத்தலில் இவர் தொடர்பு இருப்பது தெரியவந்ததும், கட்சியில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை இயக்கியவர் டைரக்டர் அமீர். அத்துடன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து சென்னையில் காபி ஷாப் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து உள்ளார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தமிழ் திரைப்பட இயக்குனர் அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் சம்மன் வழங்கினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கும் டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த 2ம் தேதி ஆஜரானார்கள்.
இந்நிலையில் இன்று காலை சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர அதிரடி சோதனையை தொடங்கினர். அதே போல் இயக்குநர் அமீர் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.மயிலாப்பூர், கொடுங்கையூர், நீலாங்கரை, தியாகராய நகர் என பல இடங்களில் சோதனை நடக்கிறது.
ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீடு, அப்துல் பாசித் புகாரி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்கள் என சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
போதை பொருள் தடுப்பு பிரிவில் இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடக்கிறது. தேர்தலுக்காக இந்த சோதனை நடக்கிறதா அல்லது அமீரையும் குறிவைத்து இந்த சோதனை தொடங்கப்பட்டுள்ளதா என்பது போக போகத்தெரியும்.