பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா ,வி. கே. சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வருகிறார். சென்னை வரும் அமித்ஷா விமான நிலையத்திலிருந்து பள்ளிக்கரணை செல்கிறார். அங்கு தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதன் பின்னர் சென்னை விமான நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார்.
இந்த நிலையில் அமித்ஷா வருகையை முன்னிட்டு, வேலூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர் உள்பட 4 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள், காவலர்கள் என 1,400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்கூட்ட மேடைக்கு பின்புறம் சிறப்பு இலக்கு படை பிரிவு முகாமிட்டு கண்காணிக்கிறது. வெடிகுண்டு பரிசோதனை குழுக்கள் மோப்ப நாயுடன் 15 பிரிவாக பிரிந்து சோதனை நடத்துகின்றனர்.