தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக தலைமையில் 3வது அணி போட்டியிடுகிறது. எனவே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கி்றார். 6-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, ‘ரோடு ஷோ’வில் (வாகனப் பேரணி) பங்கேற்பதற்காக கார் மூலம் ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை வழியாக தியாகராய நகரில் உள்ள பனகல் பார்க் பகுதிக்கு வந்தார்.
அங்கு திரண்டிருந்த ஏராளமான பாஜக தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்த பிரதமர் மோடி, 6.30 மணி அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏறி ‘ரோடு ஷோ’வை தொடங்கினார்.
வாகனத்தில் பிரதமருடன் தமிழக பாஜக தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வடசென்னை தொகுதி வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோர் இருந்தனர். பனகல் பார்க் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரைபாண்டி பஜார் பகுதியில் சுமார் 2 கி.மீ.தூரத்துக்கு பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ சென்றார்.
பிரதமரை வரவேற்கும் விதமாகசாலையின் இருபுறமும் ஏராளமானபாஜக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்துகைகூப்பி வணக்கம் தெரிவித்து, கையசைத்து, தாமரை சின்னத்தை காண்பித்தவாறே பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.