தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டெல்டா மாவட்ட விவசாய பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி செய்ய முடியாமல் வறட்சியாக உள்ளது . கர்நாடகாவில் பருவமழை நன்றாக பெய்து அணைகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. ஜூன் 12-ந் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும். ஏக்கருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
எப்போதெல்லாம் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கவில்லையோ அப்போதெல்லாம் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட வேண்டும். இனி சம்பா சாகுபடியையாவது பாதுகாக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி தஞ்சையில் பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் .
மேற்கண்டவாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவலை மணியரசன் நிருபர்களிடம் கூறினார்.