By senthil – January 22, 2022
Share E-Tamil News
மலேசியாவில் இயங்கி வரும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் மூலம் தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருபவர் டத்தோ அப்துல் மாலிக். கபாலி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவரது நிறுவனத்தை அணுகி, ரஜினியின் ‘பேட்ட’ ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-3’ மற்றும் தனுஷின் ‘நான் ருத்ரன்’ ஆகிய 3 படங்களுக்கான பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி அவர்களை நம்பவைத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி ராமசாமி, அவற்றை தருவதாக கூறி அந்த நிறுவனத்திடம் இருந்து 30 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்று தெரியவந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதுகுறித்து கேட்டபோது, 15 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து முரளி ராமசாமி அப்போதைக்கு சமாளித்துள்ளார். அதன்பின்னர் ‘காஞ்சனா-3’ மற்றும் ‘நான் ருத்ரன்’ ஆகிய படங்களின் பதிப்புரிமையும் அவரிடம் இல்லை என்பதும் தங்களை மோசடியாக ஏமாற்றி பணம் பெற்றிருக்கிறார் என்பதும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து முரளி ராமசாமியிடம் கேட்டபோது, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி தர மறுத்துயிருக்கிறார். இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மீது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது தற்போது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.