தமிழக அரசு சார்பில்...இங்கிலாந்தில் பென்னி குவிக் சிலை.... - ஸ்டாலின் அறிவிப்பு

By senthilvel – January 15, 2022

102

Share E-Tamil Newsதேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் தனது பெரும் முயற்சியால் கட்டினார். பென்னிகுவிக் லண்டனில் உள்ள தனது சொத்துக்களை விற்று தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கவும், வறண்டு கிடந்த நிலங்கள் வளம் பெறவும் இந்த அணையை கட்டினார். இதனால், 'முல்லைப்பெரியாறு அணையின் தந்தை' என பென்னிகுவிக் அழைக்கப்படுகிறார். தேனி மாவட்ட மக்கள் சாதி, மதம் கடந்து பென்னிகுவிக்கை கடவுள்போல் வணங்கி வருகின்றனர். பென்னிகுவிக் பிறந்தநாளான ஜனவரி 15-ந்தேதி தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் 'பென்னிகுவிக்' பொங்கல் என்ற பெயரில் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுவார்கள். மேலும் பென்னிகுவிக் பிறந்தநாளை அரசு விழாவாகவும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அந்த வகையில் பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள் இன்று தேனி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் ஏராளமானோர் அவரின் உருவ சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர். அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன் ஆகியோர் இன்று காலையில் பென்னிகுவிக் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செய்தனர். இந்நிலையில்....... தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பென்னி குயிக்கின் சொந்த ஊரான லண்டன் கேம்பர்ளி நகர மைய பூங்காவில் சிலை நிறுவப்படும். லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சி எடுக்கப்பட்டு சிலை நிறுவ சட்டப்படி உரிய ஒப்புதல் பெறப்பட்டது. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies