சபரி மலையில் தோன்றிய மகரஜோதி..... சரண கோஷத்துடன் பக்தர்கள் பக்தி பரவசம்....

By senthilvel – January 14, 2022

4394

Share E-Tamil Newsசபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கராந்தி பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படும். இதன்படி இன்று இந்த பூஜை நடைபெற்றது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் இன்று மாலை சபரிமலை சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்பட்ட திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக்கொண்டனர். பின் நடை அடைத்து அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடைதிறந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  இந்நிலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் காட்சி அளித்தது. அப்பொழுது சுவாமியே சரணம் அய்யப்பா என பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் சன்னிதானம் மட்டுமின்றி சபரிமலை எங்கும் எதிரொலித்தது.  அதே நேரத்தில் பொன்னம்பல மேட்டில் 3 முறை, மகர ஜோதி பக்தர்களுக்கு காட்சி அளித்தது.  மகர விளக்கையொட்டி பக்தர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகர ஜோதியை தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அய்யப்பனுக்கு வரும் 18ஆம் தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 19ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிந்து 20ஆம் தேதி காலை 6.30மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies