பொய்யான தகவல்.. ஒபிஎஸ் -ரவீந்திரநாத் மீது வழக்கு..

By செந்தில் வேல் – January 10, 2022

260

Share E-Tamil Newsதேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி முதல் தெருவை சேர்ந்தவர் மிலானி. இவர், தேனி மாவட்ட தி.மு.க. இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் ஆவார். இவர், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக 2 மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டு தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் தங்களின் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்தும், பொய்யான தகவல்களை தெரிந்தே குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் மக்களை ஏமாற்றி அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை, தேனி சிறப்பு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது. மனுக்கள் மீதான விசாரணையை தொடர்ந்து அந்த இரு மனுக்கள் மீதும் தனித்தனியாக உத்தரவுகளை கடந்த 7-ந்தேதி மாஜிஸ்திரேட்டு பிறப்பித்தார்.

அதில், "இந்த புகார்கள் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி அல்லது அதற்கு முன்பு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் வாரண்டு இல்லாமல் கைது செய்யக்கூடாது" என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 125 (ஏ)-ன் கீழ் தனித்தனியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுளளனர்.. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies