மத்திய அரசு கை விரித்த 1200 மெகாவாட்.... பவர் கட்டின் பின்னணி என்ன? ..

By செந்தில் வேல் – April 23, 2022

534

Share E-Tamil Newsதமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தினமும் சராசரியாக, 5,500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. பிற மாநிலங்களை உள்ளடக்கிய, 11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 2,830 மெகா வாட் மின்சாரமும்; பி.டி.சி., எனப்படும் 'பவர் டிரேடிங் காப்பரேஷன்' நிறுவனம் வாயிலாக, 550 மெகா வாட் மின்சாரமும் கொள்முதல் செய்யப்படுகிறது.  கோடை காலம் துவங்கிஉள்ளதால், மார்ச் இறுதியில் இருந்து தமிழகத்தின் தினசரி மின் தேவை சராசரியாக, 16 ஆயிரம் மெகா வாட் மேல் இருந்தது. புதிதாக வழங்கப்பட்ட ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பால், தினசரி மின் தேவை கூடுதலாக, 350 மெகா வாட் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 20ம் தேதி காலை முதல் மின் தேவை, 16 ஆயிரம் மெகா வாட் மேல் இருந்தது. அன்றைய மதியம் முதல், கடலுாரில் உள்ள என்.எல்.சி., 2, கர்நாடகாவில் உள்ள குட்கி உள்ளிட்ட அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதால், 750 மெகா வாட் மின்சாரம் கிடைக்கவில்லை. இது தவிர, திருவள்ளூரில் உள்ள வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தில், 600 மெகா வாட் திறன் உடைய இரண்டாவது அலகில், தொழில்நுட்ப கோளாறால் உற்பத்தி பாதிக்கப்பட்டது துாத்துக்குடி மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய இரு அலகுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதேசமயம், மின் தேவை அதிகம் இருந்ததால், அதை பூர்த்தி செய்ய, மின்சார சந்தையில் இருந்து உடனடியாக, 1,000 - 1,200 மெகா வாட் கொள்முதல் செய்யும் நடவடிக்கையில், மின் வாரியம் ஈடுபட்டது.ஆனால் அந்த சமயத்தில், தென் மாநிலங்கள் அனைத்திலும் தேவை அதிகரிகரித்துள்ளதாக கூறி மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க முடியாது  என அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டதால்  மின்சாரம் கிடைக்காமல் மின் தடை ஏற்பட ஆரம்பித்தது. குறிப்பாக மின் தேவை அதிகம் உள்ள நிலையில், அதற்கு இணையான அளவுக்கு உற்பத்தியும், கொள்முதலும் இல்லை. இதனால் பல மாவட்டங்களில், 20ம் தேதி மாலை நள்ளிரவு வரை மின் தடை ஏற்பட்டது. இரவு, 9:55 மணிக்கு வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு, மீண்டும் உற்பத்தி துவங்கியது. அதே சமயம் 21ம் தேதி  நள்ளிரவுக்கு மேல் சில மாநிலங்களில் தேவை குறைந்ததால்,மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்படும் என மத்திய அரசு மின் அதிகாரிகள் கூறினர்.. இதனால்  படிப்படியாக மின் வினியோகத்தில் இயல்பு நிலை திரும்பியது. தேவையான நேரத்தில் மத்திய அரசு கைவிரித்தால் மின் தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் விபரம் தெரிவிக்கின்றனர்.. இதனையே புள்ளி விபரங்களுடன் தமிழக மின்த்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில்  விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடதக்கது...