பணத்தை திருப்பிக் கேட்ட அதிமுக பிரமுகரை கொன்ற பெண்.....

By senthilvel – September 27, 2022

4448

Share E-Tamil Newsகூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்  செந்தில்குமார்(41). இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளராக உள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக பெருமாட்டுநல்லூர் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். காஞ்சிபுரம் பகுதியில் பிரபல தாதாவாக இருந்த மறைந்த ஸ்ரீதர் என்பவருடன் செந்தில் குமார் நெருங்கிய தொடர்பிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் நந்திவரம் அருகே நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செந்தில் குமார் இன்று உயிரிழந்தார். சிசிடிவை காட்சிகளை வைத்து காவல்துறையினர் அந்த மர்ம நபர்களைத் தேடிவந்தனர்.  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் GAT என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி கொடுப்பதாகப் பலரை ஏமாற்றியதாக அந்த நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்தன. இந்த நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்த விஜயலட்சுமி என்பவர் அப்பகுதியில் பல கோடி ரூபாய் அளவிற்குப் பொதுமக்களிடம் மோசடி செய்து தலைமறைவாகியுள்ளார். கொலை செய்யப்பட்ட செந்தில் குமாரின் உறவினர்தான் விஜயலட்சுமி. அவரின் ஆசை வார்த்தைகளை நம்பி செந்தில் குமார் அந்த நிறுவனத்தில் 15 லட்ச ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளார். இதனால் விஜயலட்சுமியிடம் பணத்தைத் திரும்பிக் கேட்டு செந்தில் குமார் தொந்தரவு செய்துள்ளார். அதன் பின்னணியில் கொலை நடந்திருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். விசாரணையின் அடிப்படையில் விஜயலட்சுமி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.