என்ஐஏ சோதனை......கேரளாவில் இன்று முழு அடைப்பு....பஸ்கள் உடைப்பால் பதற்றம்

By செந்தில்வேல் – September 23, 2022

90

Share E-Tamil News



 நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ அமைப்பின் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 70 மையங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன் எளமரம் உள்ளிட்ட 106 பேர் நாடு தழுவிய சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் சி.பி. முஹம்மது பஷீர், தேசிய அவை உறுப்பினர் பேராசிரியர். பி. கோயா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி நடத்தப்பட்ட நாடு தழுவிய என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலக் குழு இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பஸ்கள் காலையில் வழக்கம் போல ஓடியது.  பல்வேறு இடங்களில்  பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் பல பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.  சில பஸ் டிரைவர்கள் பாதுகாப்பு கருதி ஹெல்மட் அணிந்தவாறு பஸ்கள் ஓட்டினர். கடைவீதிகளில்  மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. 

கேரளாவில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவையில் இருந்து கேரள மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் கேரளாவுக்கு தமிழக பஸ்கள் இயக்கப்படவில்லை.