மியான்மரியல் .......60 தமிழர்கள் பிணை கைதிகளாக தவிப்பு

By செந்தில்வேல் – September 20, 2022

4436

Share E-Tamil News மியான்மர் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதிகள் மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த பகுதிகளை ஆயுதம் ஏந்திய குழுவினரே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்கள் பெருமளவில் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அங்கு சமூக விரோத நடவடிக்கைகள் அதிகம் நடை பெறுகிறது. வங்கி கணக்கில் யார்-யார்? எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவற்றை திருடுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

வெளிநாடுகளை சேர்ந்த நபர்களை கடத்தி சென்று பிணை கைதிகளாக வைத்து அவர்களை சைபர்கிரைம் குற்றங்களில் ஈடுபட வைக்கிறார்கள். இந்தியாவில் உள்ள இளைஞர்களையும் அவர்கள் கடத்தி வைத்து உள்ளனர். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் 300 பேர் அவர்களிடம் உள்ளனர். இதில் 60 தமிழர்கள் பிணை கைதிகளாக மியான்மர் நாட்டில் தவிக்கிறார்கள். சில பிணை கைதிகள் தங்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் பிணை கைதிகளாக சிக்கியுள்ளதாக வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

தங்களை சைபர்-கிரைம் குற்றங்களில் ஈடுபடும்படி 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்து சித்ரவதை செய்வதாக கூறி உள்ளனர். மியான்பரில் மியாவாடி பகுதியில் அவர்கள் அனைவரும் பிணை கைதிகளாக உள்ளனர். தங்களை மீட்குமாறு அவர்கள் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். தினமும் 15 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்யும்படி அவர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த கிளிஞ்சல் மேடு கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் தீபமணி (வயது 30) என்பவரையும் மியான்மர் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக அவரது தந்தை ராஜா சுப்பிரமணியம் காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூரிடம் மனு கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- எங்களது மகன் தீபமணி (வயது 30). ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் படிப்பை முடித்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக துபாய்க்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றார். அதன்பின்னர், துபாய் நிறுவனத்தின் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். தாய்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, இவருடன் சேர்த்து 30-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை மர்ம கும்பல் மியான்மர் நாட்டிற்கு கடத்திச் சென்று உள்ளனர். அங்கு படிப்புக்குரிய வேலை கொடுக்காமல் சட்டத்துக்கு புறம்பான வேலையை கொடுத்து உள்ளனர். அங்கிருந்து சொந்த ஊருக்கு வரவேண்டும் என்றால் ரூ. 49 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும் துப்பாக்கி முனையில், அடித்து, உதைத்து அதிக நேரம் கடுமையான வேலை வாங்கி சித்ரவதை செய்து உள்ளனர். சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்லி வருவதாகவும் எனது மகன் தீபமணி வீடியோ கால்மூலம் தெரிவித்து உள்ளார். எனவே மியான்மர் நாட்டில் தவிக்கும் எங்களது மகனை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.