தஞ்சையில் விஷம் குடித்த மாணவி விவகாரம்..... வீடியோ எடுத்தவர் போலீசில் ஆஜர்

By senthilvel – January 25, 2022

534

Share E-Tamil Newsதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த அரியலூரை சேர்ந்த முத்துவேல் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி இன்று மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா மற்றும் செல்போனில் வீடியோ எடுத்த முத்துவேல் ஆகியோர் வல்லம் முகாம் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டும் விசாரணை அதிகாரியுமான பிருந்தா முன்னிலையில் ஆஜராகினர். இதையடுத்து தான் வீடியோ பதிவு செய்த செல்போனை முத்துவேல் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தார். இதனை வாங்கிய போலீசார் உண்மையிலேயே இந்த செல்போனில் தான் வீடியோ எடுக்கப்பட்டதா? எதற்காக வீடியோ எடுத்தீர்கள் என பல்வேறு கோணங்களில் முத்துவேலிடம் விசாரணை நடத்தினார். அவர் அளித்த பதிலை வாக்குமூலமாக அறிக்கையாக தயார் செய்யப்பட்டது. மேலும் மாணவியின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.இதையடுத்து வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போன் மற்றும் வீடியோ பதிவு உள்ள சி.டி. ஆகியவற்றை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அலுவலகத்துக்கு விசாரணை அதிகாரி அனுப்பி வைத்தார்.அங்கு செல்போன் வீடியோவில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? வீடியோவில் உண்மையில் மாணவி தான் பேசினாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.இந்த பணி முடிந்த பின்னர் வருகிற 27 அல்லது 28-ந் தேதிக்குள் தடயவியல் துறை மதுரை கோர்ட்டில் அறிக்கை அளிக்க உள்ளது.